இராஜராஜன் நாளில் பூசைக்காகப் பட்டமாருக்கு நாற்பத்தேழுகாசு தரப்பட்டது. அதேகாலத்தில் விளக்கிற்காக முப்பத்திரண்டு பசுவும், முரசிற்காக ஒரு இடபமும் தரப்பட்டன. குலோத்துங்கன் நாளில் நாற்பத்தெண்ணாயிரனது மகள் ஒரு திருவாபரணத்திற்காக முப்பதுகாசும், நாள் ஒன்றிற்கு இரண்டுபடி அரிசியும் தந்தாள். ஒருகாளிங்கராயன் பத்து விளக்குகளுக்காக எழுபத்தெட்டுக்காசு கொடுத்துள்ளான். வீரகம்பணன் நாளில் ஒருவன் ஒரு தோட்டத்தைக் கொடுத்துள்ளான். 47. திருப்புகலூர் சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை- திருவாரூர் இருப்புப் பாதை யில் நன்னிலம் தொடர்வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில்இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப் பேறுபெற்றதலம். திருநாவுக்கரசர் முத்தி பெற்ற தலம். முருக நாயனாருடைய அவதார ஸ்தலம். சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம். பெயர்கள்: இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாழ் குழலியம்மை. இறைவன் திருநாமம் தேவாரங்களில்' கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே' 'கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து' என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள். தீர்த்தம்: அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடுகிறது.
|