பக்கம் எண் :

311
 

தொலைவில் இருக்கின்றது.

இறைவர்: முக்கோணநாதேசுவரர்.

இறைவி: மைம்மேவுகண்ணி.

இராமர் வழிபட்ட தலம்.

46. திருப்பாசூர்

பசுமை + ஊர் = பாசூர். நீர்வளத்தால் நிலம் பசுமையாய் விளங்குவதால் இப்பெயர் பெற்றதாதல் வேண்டும். தலமரம் மூங்கில் ஆதலாலும், இறைவர் மூங்கிலடியில் முளைத்தவர் ஆதலாலும் இப்பெயர் பெற்றனர் என்பர்.(பாசு = மூங்கில்).

இது திருவள்ளூருக்கு வடக்கில் 5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவள்ளூர் - பேரம்பாக்கம்நகரப் பேருந்திலோ காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பேருந்திலோ பாசூர் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் பாசூர்நாதர். இறைவி திருப்பெயர் பசுபதிநாயகி.

குறும்பர் அரசனுக்குச் சார்பாகச்சமணர்கள் கரிகால் சோழன் மீது ஏவிய பாம்பைச் சிவபெருமான் எழுந்தருளித் தடுத்து ஆட்டினார் என்பது தலமான்மியம். இச்செய்தி, "படவரவொன்றாது ஆட்டிப்பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே" என்னும் இத்தலத்துக்குரிய திருத்தாண்டகப் பகுதியாலும் இது உறுதி எய்துகின்றது. சந்திரன் பூசித்துப் பேறு பெற்றான்.

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர்பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகங்கள் இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

கல்வெட்டு:

இங்குள்ள கோயிலில் பதினாறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தொண்டைமண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர் என்று கண்டிருக்கின்றது.