இவ்வூர், முதல் இராஜராஜன் காலத்தில் க்ஷத்திரியசிகாமணி வளநாடு என்றும், மும்முடிச்சோழ வளநாடு என்றும் முதற்குலோத்துங்கன் காலத்திலும் அதற்குப்பின்பும், குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்ததெனவும் கூறப்பெறுகிறது. இது பனையூர்நாட்டுப் பிரமதேயமான திருப்புகலூர் என வழங்கப்பெறுகிறது. இறைவன் கோணப்பெருமான் என்று குறிப்பிடப்பெறுகிறார். இங்குள்ள அம்பிகை நம்பிராட்டியார் என வழங்கப்பெறுகிறார். இராஜராஜன் காலத்தில் அம்மைக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றன. திருநாவுக்கரசு நாயனார் குளிச்செழுந்த நாயனார் எனக் குறிக்கப் பெறுகிறார். இவருக்கு இராஜராஜன் காலத்தில் நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கிறது. முருகநாயனார் திருமடம் நம்பிநாயனார் திருமடம் என்றும், திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தருமபுரத்து நாயனார், யாழ்மூரி நாயனார் என்றும், திருநீலநக்க நாயனாரை நக்கநாயனார் என்றும் கல்வெட்டுகள் காட்டுகின்றன. 48. திருப்புத்தூர் பாண்டிய நாட்டுத்தலம். தஞ்சை மதுரை பேருந்து வழித் தடத்திலுள்ளது. மதுரை,புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம் திருப்புத்தூர் எனவும், கோயில் திருத்தளி எனவும் வழங்கும். அப்பர் சுவாமிகள் 'திருப்புத்தூரில் திருத்தளியான் காண்' என அறிவிப்பார்கள். உமாதேவியும், இலக்குமியும் பூசித்துப் பேறுபெற்ற தலம். இறைவன் அம்மை சந்நிதிகளுக்கு இடையில் பைரவர் சந்நிதி இருக்கிறது. பைரவர் சிறப்புடையவர். ஆனந்தக்கூத்தப்பெருமான், சிவகாமியம்மை திருவுருவங்கள் கற்சிலையாலான கண்கவரும் வனப்பின. விஷ்ணுவுக்கும் சந்நிதி உண்டு. சுவாமிபெயர் புத்தூரீசர்; திருத்தளிநாதர். அம்மை சிவகாமி அம்மையார். தீர்த்தம் திருத்தளித் தீர்த்தம், சிவகங்கை முதலியன. தலவிருட்சம் கொன்றை. கல்வெட்டு: அரசியலாரால் 1908ம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற
|