பக்கம் எண் :

325
 

திருவமுதுக்கும் நிலம்கொடுத் துள்ளதோடு இவ்வேந்தன் காலத்தில் வீதிவிடங்க விழுப்பரையனும் அவன் தம்பி அகிலநாயக விழுப்பரையனும் மூன்றாம் பிராகாரத்தில் முதல்கோபுர வாசலடியில் அறம் உரைத்த நாயனாரையும், முதற் பிராகாரத்தில் திருவலஞ்சுழி இறைவனையும், புற்றிடங் கொண்டாரையும் எழுந்தருளுவித்து, நாள்வழிபாட்டிற்கு நிலங்களை அளித்த செய்தியும் அறியலாம்.

மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் குந்தவை நல்லூர்ச் சபையார் புறம்பயத்து இறைவனுக்கு நிவந்தம் அளித்துள்ளனர். விஜய நகர வேந்தன் கல்வெட்டு மக விழாவைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ்வூரில் ஆண்டார்க்கடியா பரணர் மடம் ஒன்று இருந்தது. தாமோதர விண்ணகரம் என்ற பெருமாள்கோயில் ஒன்று இருந்தது. இவை போன்ற பல செய்திகள் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் காணலாம்.

51. திருப்புன்கூர்

சோழநாட்டுக் காவிரிவடகரைத்தலம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதிஉண்டு.

இது புன்கமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டதாகலின் திருப்புன்கூர் எனப்படுவதாயிற்று. வடமொழியில் காஞ்சாரண்யம் என வழங்கும். இத்தலத்திற்குப் பக்கத்திலுள்ள ஆதனூரில் அவதரித்த திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பக்திக்காக நந்தியை விலகும்படிச் செய்த தலம். இவர் வெட்டிய திருக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இதற்கு வடக்கே உள்ள திருப் பெருமங்கலத்தில் வசித்த ஏயர்கோன் கலிக்காமநாயனார் திருக்கோயிலைப் புதுக்கிப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். கலிக்காமர் வேண்டுகோளுக்காக இறைவன் 12 வேலி நிலங்களைப் பெற்றுக்கொண்டு மழைபெய்வித்து உலகை உய்வித்தார். இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் பதிகத்து "வையகம் முற்றும் மாமழை" என்ற பாடலால் குறிப்பிடுகின்றார்கள். இச்செய்தி கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் கூறப்பெறுகிறது. இறைவன் பெயர் சிவலோகநாதர்; இறைவிபெயர் சொக்க நாயகி; தீர்த்தம் கணபதி தீர்த்தம்; விருட்சம் புன்கமரம்.

கல்வெட்டு:

411 முதல் 415 வரையிலுள்ள ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன.