கட்டளைப்படி திருநாவுக்கரசர் "பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ" என்று தொடங்கிப் பத்துப்பாடல்களைப் பாடிக் கதவைத் திறப்பித்தார். ஞானசம்பந்தர் தேவாரம் பாடி அதை அடைப்பித்தார். முசுகுந்தச்சக்கரவர்த்தி தியாகேசப்பெருமானை எழுந்தருளுவித்த ஏழுவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகர்புவனவிடங்கர். நடனம் ஹம்ச நடனம். சுந்தரமூர்த்தி நாயனாருடன், சேரமான் பெருமாள் நாயனாரும் இங்கே வழிபட்டனர். இதற்குத் திருஞான சம்பந்தர் பதிகம் நான்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஐந்து, சுந்தரர் பதிகம் ஒன்று ஆகப் பத்துப் பதிகங்கள் இருக்கின்றன. இத்திருக்கோயிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, அதன் விளைவாய் மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பர் சுவாமிகள் திருக்குறுக்கைத் திருநேரிசையில் எட்டாம் திருப்பாட்டில் (தி.4 ப.49 பா.8), "நிறைமறைக் காடு தன்னி னீண்டெரி தீபந் தன்னைக் | கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட | நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவானுலகமெல்லாங் | குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே" |
என அருளியுள்ளார்கள். தலபுராணம், இவ்வூரில் தோன்றியருளியவரும் திருவிளையாடற் புராணம் எழுதியவருமாகிய பரஞ்சோதி முனிவரால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது. மறைசையந்தாதி: இதுயாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பெற்றது. புலவர் பெருமக்கள் பெரிதும் பாராட்டும் நூல்கள் இவை. கல்வெட்டு: இத்திருக்கோயிலில்1 சோழமன்னர்களில் மதுரை கொண்ட
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1924, No.415-503
|