பக்கம் எண் :

339
 

பெயர் - வண்டுவாழ்குழல் மங்கை. இப்பெயர் ஞானசம்பந்தரால் இவ்வூர்ப் பதிகத்தில் "வண்டுவாழ்குழல் மங்கைபங்கனை" என ஆளப்பெற்றுள்ளது.

தீர்த்தம் - காவிரி.

ஆதிசேடன் சிவராத்திரிநாளில் ஒரு பிலத்தின் வழியாய் வந்து வலஞ்சுழி இறைவனை வணங்கினான், காவிரி இங்குப் பிலத்தின் வழியாக உள்ளே இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் பெரிதும் வருந்தினான். இறைவர் ஒருசடைத்தலையாயினும் முடித்தலை யாயினும் பலியிட்டால் காவிரி வெளிப்படுமென்று அசரீரியாகக் கூறினார். அது பொழுது கொட்டையூரில் தவஞ்செய்து கொண்டிருந்த ஏரண்ட முனிவர் அப்பிலத்தில் இறங்கிக் காவிரியை வெளிக் கொணர்ந்தார். காவிரியும் வலம்சுழித்து மேலே கிளம்பிய காரணத்தால் வலஞ்சுழி என்னும் பெயர் எய்திற்று.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காலத்தில் அமுதம் திரளும்படி வழிபட்ட வெள்ளைப்பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டுவந்து எழுந்தருளுவித்துள்ளான். இப்பிள்ளையார் வீற்றிருக்கும் மண்டபம் மிக்க வேலைப்பாடு உடையது. இப்பிள்ளை யாருக்குத்தான் இங்கு பிரமோற்சவம் நடைபெறுகின்றது.

ஏரண்ட முனிவரின் பிரதிமை இக்கோயிலில் இருக்கிறது. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் மூன்றும், அப்பர் பெருமான் பதிகம் இரண்டும் ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன. இறைவனை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும் என்னும் பொருளுள்ள "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே" எனத் தொடங்கும் பாசுரம் சைவ நன்மக்களால் அடிக்கடி எடுத்து ஓதப்பெறும் பாடல்களில் தலை சிறந்து விளங்கும் ஒன்றாகும்.