இறைவர், இறைவியாரின் பெயர்கள்: இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருவலஞ்சுழி உடையார், திருவலஞ்சுழி மகாதேவர், திருவலஞ்சுழி ஆழ்வார் என்னும் பெயர்களாலும், இறைவியார் வண்டுவாழ் குழலி நாச்சியார் என்னும் பெயர்களாலும் குறிக்கப்பெற்றுள்ளனர். திருப்பணிகள்: இக்கோயிலின் மகாமண்டபத்திற்குத் தீராவினை தீர்த்தான் திருமண்டபம் என்று பெயர். அதைக் கட்டியவன் ஆராவமுது தித்தன் பெருமாள் ஆவன. அவன் அம்மண்டபத்தை வீரமாராசன் ஐயன் வெற்றிக்காகக் கட்டினான். இச்செய்தி இம்மண்டபத்தின் வடபாலுள்ள தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிராகாரத்துக் கிழக்குச்சுவர் மகாப்பிரதான திப்பரசர் மகனார் தேவராய உடையாரால் கட்டப்பெற்றது. மூன்றாம் பிராகாரத்துச் சுவர் நெருப்புப்பற்றிக்கொண்டதின் விளைவாக கீழே விழுந்துவிட்டது. அது ஆர்க்காட்டுத் தலைவனும், செல்வப்பிள்ளை என்பவனும் ஆகிய சேதிராயனால் மீளவும் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில் திருப்பரிகலமண்டபத்தைக் கட்டுவித்தவன் ஆதமங்கலமுடையான் ஒற்றியூரன் பூபாலன் கருணாகரன் ஆவன். இது நிகழ்ந்த காலம் முதற் குலோத்துங்கசோழனின் நாற்பத்திமூன்றாம் ஆண்டாகும். இத்திருவலஞ்சுழி உடையார் கோயில் கீழைச்சோபான பீடத்து இருக்கும் மண்டபம் உற்சவமண்டபமாகும். இது கட்டத் தொடங்கப் பெற்ற காலம் வீரராஜேந்திரசோழதேவரின் எட்டாம் ஆண்டாகும். க்ஷேத்திரபாலரின் திருக்கோயில்: க்ஷேத்திரபாலர் என்பவர் வயிரவர் ஆவர். அவர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் வெளிப்பிராகாரத்தில் இராஜகோபுரத்திலிருந்து இரண்டாம் கோபுர வாசலுக்குப் போகும் வழியில் தெற்குப் பக்கத்தில் இடிந்தநிலையில் கல்வெட்டுக்களுடன் கூடிய ஒரு சிறு கோயிலாக இருக்கிறது. இக்கோயில் முற்றிலும் இடிந்துவிடுவதற்கு முன் இதில் முளைத்துள்ள மரங்களைக் களைந்து கோயிலைப் புதுப்பிப்பது சைவநன்மக்களின் தனிப்பெருங்கடமையாகும். இக்கோயிலைக் கட்டியவர் முதலாம் இராஜராஜசோழரின் முதற்பெருந்
|