உ திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் ஆறாம் திருமுறை 1. கோயில் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லையிலிருந்து சென்று திருவேட்களம் திருக்கழிப்பாலை வணங்கி, மீண்டும் வந்து தில்லைக் கூத்தப் பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநா. புராணம் - 175.) குறிப்பு: இத் திருமுறைமுழுதும் திருத்தாண்டகங்களால் தொகுக்கப் பெற்றது. இருபத்தேழ் எழுத்து முதலாகப் பெற்று வரும் அடிகளாலாகிய செய்யுள்கள் 'தாண்டகம்' எனப்படும். இருபத்தேழ் எழுத்திற் குறைந்துவரும் அடிகளாலாகிய செய்யுள்கள் 'சந்தம்' எனப்படும். சந்த அடிகளும் தாண்டகங்களில் விரவி வருதல் உண்டு. அவ்வாறு வரும் செய்யுள்கள், 'சந்தத் தாண்டகம் - தாண்டகச் சந்தம் - சமசந்தத் தாண்டகம்' என ஏற்ற பெற்றியான் வழங்கப்பெறும். இத்திருமுறையுள்ளும் அவ்வாறு வந்தன உள. தாண்டகம் முதலியவற்றின் இயல்புகளை யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுட் காணலாம்.
|