பெரிய திருத்தாண்டகம் பதிகத் தொடர் எண்: 214 | பதிக எண்: 1 |
திருச்சிற்றம்பலம் 2086. | அரியானை அந்தணர்தம் சிந்தை யானை | | | அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் | | | தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் | | | திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் | | | கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் | | | கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற | | | பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் | | | பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | 1 |
"ஆரியத்திலுள்ள தண்டகம் என்னும் ஒருவகைச் செய்யு ளோடு சம்பந்தம் உடைமை பற்றித் 'தாணடகம்' எனப்பட்டது" என்பர். எவ்வாறாயினும் எழுத்தளவை நோக்காது, ஒன்று, இரண்டு, ஐந்து, ஆறாம் சீர்கள் மூவசைச் சீர்களாகவும், ஏனைய சீர்கள் ஈரசைச் சீர் களாகவும் அமைந்த எண்சீரடி நான்கினால் வரச்செய்தலே ஈண்டுக் கருத்தென்க. இத்திருப்பதிகம், இறைவனது பேரருள் இயல்புகளைப் பேசுந்தொறும் உளதாகிய பேரின்ப மேலீட்டில் அருளிச் செய்தது. அன்னதாகவே, இதனுள் இறைவனைப் பல பெயர்களாற் குறித்தருளியது, அவ்வியல்புகளை எல்லாம் தாம் பலபட எடுத்துப் பேசிய வாற்றினை அருளிச்செய்தவாறாம். கோயில் - தில்லை. இத் தலத்தையே, 'கோயில்' எனச் சிறந்தெடுத்தோதுதல், உடம்பினுள் இறைவர் வெளிப்பட்டு நின்று ஆடல் இயற்ற நிற்கும் நெஞ்சகம் போல, உலகினுள் அவ்வாறு நிற்றல் பற்றி என்க. 'பெரிய திருத்தாண்டகம்' என்றது, மேற்கூறிய அளவிற் குறையாத அடிகளே பெற்ற தாண்டகம் என்றவாறு. அதனிற் குறைந்ததனையும், சிலர், 'தாண்டகம்' என வழங்குதல் பற்றி இவ்வாறு கூறப்பட்டது. இப்பெயரினை இத்திருமுறை முழுவதற்கும் உரியதாகக் கொள்க. 1. பொழிப்புரை: எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன்,
|