| 2092. | வரும்பயனை எழுநரம்பி னோசை யானை | | | வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி | | | அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த | | | அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச் | | | சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில் | | | துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் | | | பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் | | | பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | 7 |
அருளிச்செய்யுமாற்றினை இடம்நோக்கியுணர்ந்துகொள்க. சுரும்பு - வண்டு. கடிபொழில்கள் - நறுமணச் சோலைகள். துளக்கு - அசைவு. 7. பொ-ரை: ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன். மேருவை வில்லாகக் கொண்டு, தேவர்களையே அம்பாகக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு அம்பினைச் செலுத்திய தலைவன். அலைகடலில் தோன்றிய விடத்தை உண்டவன். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் அசையாத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. கு-ரை: 'எழுநரம்பின் ஓசை' எனப் பின்னர் வருகின்றமையின், "வரும் பயன்" என்றது அவ்வோசைகளான் வரும் பயன் என்க. "ஏழிசையாய் இசைப்பயனாய்" (தி.7. ப.51. பா.10) என்ற அருள் வாக்குங் காண்க. பயன் என்றது, பண்ணென்றாயினும், பண்ணால் அடையும் இன்பமென்றாயினும் கொள்ளப்படும். திருமால் அம்பாயும், காற்றுக் கடவுள் சிறகாயும், தீக்கடவுள் முனையாயும் அமைந்தமையின், "வானவர்கள் முயன்ற வாளி" என்றருளிச் செய்தார். "குன்றவார்சிலை நாணரா அரி வாளிகூர்எரி காற்றின் மும்மதில்வென்ற வாறெங்ஙனே விடையேறும் வேதியனே" (தி.2 ப.50. பா.1) என்றருளிச்செய்ததும் காண்க. 'அம்மான்' என்பதில் அகரம் பலரறி சுட்டு. துறந்தோர் உள்ளப் பெரும் பயன் - துறவுள்ளத்தால் அடையும் முடிந்த பயன். துளங்காத - கலங்காத.
|