பக்கம் எண் :

371
 

மேம்பட்ட ஒளியை உடையவன். உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன். பெரிய இந்நில உலகையும், வானத்தையும், தேவர் உலகையும் உள்ளிட்ட

ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

கு-ரை: கார் ஒளிய - கருநிறத்தினனாகிய. "தொல்லை ஒளி" என்றருளியது. அவ்விருவர்க்கும் முன்னோன் ஆனதுபற்றி' 'காணா வண்ணம் நின்ற ஒளி' என்றருளியது, உயிர்கள் கட்டுற்றுள்ள நிலையில் அவற்றிற்குத் தோன்றாது நின்று மறைத்தலைச் செய்தல் பற்றியும், "சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏர்ஒளி" என்றருளியது, அவை பருவம் எய்திய நிலையில் வெளிப்பட்டு நின்று அருளுதலைச் செய்தல்பற்றியும், "ஏழுலகும் கடந்து அண்டத்தப்பால் நின்ற பேரொளி" என்றருளியது, அவ்வருள் வழிச் சென்று உலகிறந்து நின்ற வழி அநுபவிக்கப்படும் பெரும் பொருளாதல் பற்றியும் என்க. திகழ்தல் உளதாதலையும், ஏர்தல் தோன்றுதலையும் (எழுதலையும்), பெருமை அளவின்மையையும் உணர்த்தும் என்க. கடிக்கமலம் - நறுமணத் தாமரை. 'இருந்தயன்' என்பதும் பாடம்.

திருநாவுக்கரசர் புராணம்

 

கையுந் தலைமிசை புனைஞ் சலியன

கண்ணும் பொழிமழை ஒழியாதே

பெய்யுந் தகையன கரணங் களும்உடன்

உருகும் பரிவின பேறெய்தும்

மெய்யுந் தரைமிசை விழுமின் பெழுதரும்

மின்தாழ் சடையொடு நின்றாடும்

ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.

 

-தி.12 சேக்கிழார்