பக்கம் எண் :

1102
 
797.தளிசாலைகள் தவமாவது

தம்மைப்பெறி லன்றே

குளியீருளங் குருக்கேத்திரங்

கோதாவிரி குமரி

தெளியீர்உளஞ் சீபர்ப்பதம்

தெற்குவடக் காகக்

கிளிவாழைஒண் கனிகீறியுண்

கேதாரமெ னீரே.

6


அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில், இங்குச் சொல்லப்பட்டு வரும் இத் திருக்கேதாரமே. அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம்; ஆதலின், இதனைத் துதிமின்கள்.

கு-ரை: "ஓடிய", பின்னது முற்று, கண்ணொட்டமின்மையைக் குறிக்க, "நமனார்" என உயர்த்து அருளிச்செய்தார். "அடிகட்கு" எனப் பின்னர் வருதலின், வாளா, "ஆளாய்" என்றருளினார். "அது", பகுதிப்பொருள் விகுதி. "அதுவே" என்ற ஏகாரம், பிறவற்றினின்றும் பிரித்துக் கோடலின், பிரிநிலை. 'யாது' என்பது எஞ்சிநின்றது. செய்யுளாகலின் இதுவே என்னும் சுட்டுப்பெயர் முன் வந்தது. "இது" என்றதன்கண் சுட்டு, 'இங்குச் சொல்லப்படுவது' என்னும் பொருளது.

6. பொ-ரை: உலகீர், தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது, மக்கள் அவ்விடங்களை அடைந்தாலன்றோ? இதனை மனத்துட் கொண்மின்கள்; கொண்டு, தெற்கென்னும் திசை கிடைக்க, 'கோதாவரி, குமரி' என்னும் தீர்த்தங்களிலும், வடக்கென்னும் திசைகிடைக்க, அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத்திலும் சென்று முழுகுமின்கள்; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும், வடக்கில் கிளிகள், பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதிமின்கள்.

கு-ரை: 'தவச்சாலைகள் ஆவது' என மாற்றியுரைக்க. 'குளியீர் உள்' எனவும், 'அம் குருக்கேத்திரம்' எனவும் பிரிக்க. "குளியீர்" என்றதனால், "குருக்கேத்திரம்" என்றது, அதன்கண் உள்ள தீர்த்தத்தின் மேலதாயிற்று. 'தெற்கு, வடக்கு' என்றல், விந்த மலையை வைத்து என்க. இத் திருப்பாடலுள், 'குமரி முதல் இமயங்காறும் நன்னெறிச் செலவு சென்று, தீர்த்தங்களின் மூழ்குதலும், தலங்களை வணங்குதலும் வேண்டும்' என்று அருளியவாறு.