84. திருக்கானப்பேர் பதிக வரலாறு: ஆரூரர், திருச்சுழியலில் பெருமானை இறைஞ்சி தங்கியிருக்கும் பொழுது, இரவில் பெருமான் கனவில் காளைப் பருவத்தில் செங்கையிற் பொற்செண்டும், திருமுடியிற் சூழியமும் தோன்ற எங்குமிலாத் திருவேடம் காட்டக் கண்டு அதிசயித்து, விழித்தெழுந்த பின்னர்க்கழறிற்றறிவார்க்கு மொழிந்தருளி, திருச்சுழியற் பெருமானை வணங்கித் திருக்கானப் பேருக்கு எழுந்தருளும்போது, "காளையார்தமைக் கண்டு தொழப்பெறுவது என்று" என்று பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 கழறிற். புரா. 114 - 15) இதனால் இத்தலம், 'காளையார் கோயில்' என வழங்குதல் குறிப்பிடத்தக்கது. குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருளும், அதன் வரலாற்றானே விளங்கும். பண்: புறநீர்மை பதிக எண்: 84 திருச்சிற்றம்பலம் 852. | தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் | | சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும் | | புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள் | | பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும் | | கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங் | | கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் | | கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 1 |
1. பொ-ரை: அடியேன், மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை, அவனது, அடியவர்கள் வணங்குகின்ற திருவடியையும், ஒளியையுடைய இளைய பிறைச்சூட்டினையும், சூதாடு கருவிபோலும், மெல்லிய தனங்களையுடைய உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும், ஒளிவிடுகின்ற செந்தாமரை மலர்போலும்
|