931. | பற்றி வரையை யெடுத்த அரக்கன் இற்று முரிய விரலால் அடர்த்தார் எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே. | | 9 |
932. | ஒற்றி யூரும் அரவும் பிறையும் பற்றி யூரும் பவளச் சடையான் ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாடக் கழியும் வினையே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
9. பொ-ரை: தமது மலையைப்பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை, அவனது உறுப்புக்கள் ஒடிந்து முரியும்படி நெருக்கின வராகிய இறைவர், கடல் நீர் சூழ்ந்த, அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே, அடியவரைத் தாக்குகின்ற வினைகளை நீக்குவார். கு-ரை: 'இற்று முரிய' என்பது ஒருபொருட் பன்மொழி. ஓதம் - மிக்க நீர். 10. பொ-ரை: ஒன்றை ஒன்று உராய்ந்து ஊர்கின்ற பாம்பும், பிறையும் பற்றுக்கோடாக நின்று ஊரும் பவளம்போலும் சடையை உடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை நன்கு கற்றுப்பாடினால், வினைகள் நீங்கும். கு-ரை: 'அரவும் பிறையும் உராய்ந்து ஊரும்' என்றது, அவை 'பகையின்றி நட்புப்கொண்டு வாழும்' என்றதாம். இதனை, ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூரும்அப் பாம்பும் அதனையே ஒற்றி யூரஒரு சடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே. (தி. 5 ப. 24 பா. 1) என்றதனோடு வைத்து நோக்குக.
|