பக்கம் எண் :

1213
 

92. திருப்புக்கொளியூர் அவினாசி

பதிக வரலாறு:

சுவாமிகள், ஆரூரிலிருக்கும் நாளில் மலைநாடணைவதற்கு விருப்புக் கொண்டு, ஆரூர்ப் பெருமானிடம் விடை கொண்டு, பல பதிகளையும் வணங்கிக்கொண்டு, கொங்கு நாட்டில், திருப்புக்கொளியூர் அவினாசி சென்று, நெடுநாள்களுக்கு முன்னர், முதலை விழுங்கிய மகனை, இறையன்பு மிகுந்த அவனது பெற்றோர்களது துயரத்தை நீக்குதற்பொருட்டு, முதலை வாயினின்றும் அழைத்து தருதற்கு அக்குளக் கரைக்கண் சென்று பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 வெள்ளானைச். சருக். 10 - 11.) இதன் நான்காவது பாடல் முடிவதற்குள், பெருமான் அருளான் முதலை, மகனைக் கரையில் சேர்த்தது.

குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலிய பொருள், இதன் வரலாற்றானே விளங்கும், இதன்கண் பலவிடங்களில் பாடங்கள் பலபட ஒதப்படுகின்றன.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 92

திருச்சிற்றம்பலம்

933.எற்றான் மறக்கேன் எழுமைக்கும்

எம்பெரு மானையே

உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்

உணர்ந் துள்ளத்தால்

புற்றா டரவா புக்கொளி

யூர்அவி னாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதி

யேபர மேட்டியே.

11. பொ-ரை: புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவனாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!