1026. | ஊழிதொ றூழிமுற்றும் உயர் | | பொன்நொடித் தான்மலையைச் | | சூழிசை யின்கரும்பின் சுவை | | நாவல ஊரன்சொன்ன | | ஏழிசை இன்றமிழால் இசைந் | | தேத்திய பத்தினையும் | | ஆழி கடலரையா அஞ்சை | | யப்பர்க் கறிவிப்பதே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: ஆழ்ந்ததாகிய கடலுக்கு அரசனே! உலகம் அழியுங்காலந்தோறும் உயர்வதும், பொன்வண்ணமாயதும் ஆகிய திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனை, திரு நாவலூரில் தோன்றியவனாகிய யான், இசை நூலிற் சொல்லப்பட்ட, ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால், மிக்க புகழை யுடையனவாகவும், கரும்பின் சுவை போலும் சுவையினை யுடையனவாகவும் அப்பெருமானோடு ஒன்றுபட்டுப் பாடிய இப் பத்துப் பாடல்களையும், திருவஞ்சைக்களத்தில் வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, நீ அறிவித்தல் வேண்டும். கு-ரை: 'திருக்கயிலை மலை, உலகமெல்லாம் அழிகின்ற ஒவ்வோர் ஊழியிலும் ஓங்கி உயர்வது' என்பது, இத்திருப்பாடலில் குறிக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது. "நாவல்" என்ற அகரம் சாரியை. "அறிவிப்பது" என்பது, தொழிற்பெயர். அதன்பின், 'வேண்டும்' என்பது சொல்லெச்சமாயிற்று. இதனால், இத்திருப்பதிகம் நிலவுலகத்தில் மலைநாட்டில் உள்ள திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு உரித்தாதல் அறிக. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஏழாம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது. | பதிகங்கள் | பாடல்கள் | | | | ஏழாம் திருமுறை | 100 | 1026 |
|