உ ஏழாம் திருமுறையில் உள்ள தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் 1. திருஅஞ்சைக்களம் கொச்சி இருப்புப் பாதையில், ஷோரனூர் சந்திப்பிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள, திருச்சூர் என்னும் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி, கொடுங்கோளூர் சென்று, அங்கிருந்து இரண்டு கி. மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்துகளிலும் செல்லலாம். சைவமும் தமிழும் தழைக்க தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திருவவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக்கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேரநாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். 'கடலங்கரை மேல் மகோதை யணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே' என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்). இறைவர் : அஞ்சைக்களத்து அப்பர். இறைவி : உமையம்மை
குறிப்பு : இத் தல வரலாற்றுக் குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு. சி. எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதியுதவப் பெற்றன.
|