பக்கம் எண் :

153
 

நிலம் காணியாகக் கொடுக்கப்பட்டு வந்தது, இந்நிலையில், "பூமேவு வளர் திருப்பொன் மார்வுபுணர" என்னும் தொடக்கமுள்ள மெய்க்கீர்த்தியை உடைய இராசகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி, குலோத்துங்க சோழன், தன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், தன் தேவாரத்துத் திருப்பதியம்பாடிய பொய்யாதசேவடி தேவகண நாதனான இராஜராஜப் பிச்சனையும் அவன் வர்க்கத்தாரையும் இத்திருக்கோயிலில் திருப்பதியம் பாடுவித்துக்கொண்டு, முன்பில் ஆண்டுகள் குருடர்களுக்கு விட்டுவரும் நிவந்தப்படி இவர்களுக்கும் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளான்.

இக்கல்வெட்டு 1, குருடர்களைக் கவலையின்றிக் கடவுள் பக்தியில் செலுத்துவதற்கு ஒரு வழிகாட்டியாகும்.

5. திருஆருர்

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி தொடர்வண்டிப் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையம். மயிலாடுதுறை, தஞ்சை, காரைக்கால் முதலிய பல நகரங்களிலுமிருந்து பேருந்துகள் உள்ளன. இது சோழநாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் எண்பத்தேழாவது ஆகும்.

இவ்வூர் மிகப் பழமை வாய்ந்தது. இச்செய்தியை "திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக்கொண்டநாளே" என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரப் பகுதியால் அறியலாம்.

இவ்வூரில் பூங்கோயில், அரநெறி, பரவையுண்மண்டளி என்னும் மூன்று பாடல் பெற்ற கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள் புற்றிடங்கொண்டார் (வன்மீகநாதர்) எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலே பூங்கோயில் எனப் பெயர்பெறும். இதுவே திருமூலட்டானம் எனவும் வழங்கப்பெறும். இதற்கு முப்பத்துநான்கு பதிகங்கள் இருக்கின்றன.

அரநெறி, நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். இச்செய்தியைத்


1 குறிப்பு: தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி 8, எண் 749, A.R. No. 433 of 1903