6. திருஆரூர்ப்பரவையுண்மண்டளி இது துலா நாயனார்கோயில் என்று வழங்கப்படுகிறது. திருவாரூர்க் கீழவீதியில் இருக்கின்றது. ஓர்காலத்தில் மிக்கு எழுந்து வந்த கடலையுண்டு நிலைபெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர். துர்வாச முனிவர் வழிபட்ட தலம். இவர் பிரதிமம் தல விநாயகருக்கு அருகில் இருக்கிறது. இறைவர் : மண்டலேசுரர். இறைவி : பஞ்சின்மெல்லடியாள். இத்திருப்பெயர், இவ்வூர்ப்பதிகத்தில் 'பஞ்சேரும் மெல்லடியாளை யோர்பாகமாய்' என எடுத்து ஆளப்பட்டுள்ளது. கல்வெட்டு: 1 இத் திருக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் சிதைந்து விட்டன. இராசகேசரி வர்மனாகிய குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டு, இறைவரின் திருப்பெயரை 'திருமண்டளியுடைய மகாதேவர்' என்று குறிப்பிடுகிறது. முதற்குலோத்துங்க சோழனுடைய 48 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் உண்டு. 7. திருஆலங்காடு தொண்டை நாட்டுத்தலம். திருவள்ளூர் - அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது. திருவாலங்காடு இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 5 கி. மீ. தூரத்தில் உள்ளது. நடராஜப்பெருமான் நடனஞ்செய்யும் சபை ஐந்தனுள் இது இரத்தினசபையாகும். இறைவன் காளியை ஊர்த்துவ தாண்டவத்தால்
1 See the Annual Report on South Indian Epigraphy for the year 1904; No. 577 - 579.
|