பக்கம் எண் :

166
 

பக்கத்தில் இருக்கிறது. உவச்சர் என்பார் சங்கு, காளம், இவைகளை ஊதுபவர். புறம் = நிவந்தம். உவச்சப்புறம் - என்பது சங்கு, காளம் இவைகளை ஊதுபவர்களுக்கு நிவந்தமாக அளிக்கப்பெற்றது எனப்பொருள்படும்.)

கோயிலின் சிற்சில பகுதிகளைச் செய்வித்தவர்:

அர்த்த மண்டபத்தின் வடபால், துர்க்காதேவிக்குக் கீழண்டைப் பக்கத்தில் திருவாவடுதுறை உடையாரைத் தொழுவாராக ஒரு ஆடவரின் பிரதிமையும் அவருக்குப் பக்கத்தில் ஒரு அம்மையாரின் பிரதிமையும் இருக்கின்றன. அவர்கள் இக்கோயிலில் ஒருபடை செய்வித்தவர் ஆவர். அப்பிரதிமைகளுக்கு அருகில் "இக்கோயிலில் ஒருபடை செய்விச்சு இநின்றான் வாமபூசலுடையான் எழுவன் சத்திரசேகரன் இவன் பின்பே நின்றாள் பெரிய வேளத்து வானல்லடிகள் நக்கன்" என்று தீட்டப்பட்டிருக்கின்றன. அர்த்த மண்டபத்தின் தென்பாகத்தில் பிள்ளையார் திருமேனிக்குக் கிழக்குப் பக்கத்தில் "கல்கட்டுவித்தார் பல்லவமகாதேவியார் சிவகாமு" என்று செதுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வம்மையாரும் இப்பகுதியைக் கட்டுவதற்கு உதவி செய்தவர் ஆவர். கர்ப்ப இல்லின் தென்புறத்தில் தட்சினாமூர்த்தி திருமேனிக்கு மேற்குப் பக்கத்தில் கைகளைத் தலைமேல் குவித்து வணங்கும் ஒரு பிரதிமை இருக்கிறது. அதன்கீழ் "ஸ்ரீ திருவாவடுதுறை உடையார் அடியான் அம்பலவன் திருவிசலூரான் திருநாவுக்கரையன்" என்று செதுக்கப்பட்டுள்ளது. இவனும் இத்திருப்பணிக்கு உதவி செய்தவன் ஆவன். இத்தட்சிணாமூர்த்திக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கும் பிரதிமை மிறைக்கூற்றத்து வீரமாங்குடி உடையானது ஆகும். அர்த்த மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கு வடபால், மார்பில் கைகளைக் குவித்துக்கொண்டு இறைவனை வழிபடும் நிலையில் செதுக்கப்பட்டிருக்கும் பிரதிமை திருநறையூர் நாட்டுச்சிற்றாடியான் தாமன் அம்பலவனான நமசிவாயனுடையதாகும்.

இறைவரின் திருப்பெயர்:

இத்திருக்கோயிலில் எழுந்தருளும் இறைவர், திருவாவடுதுறைத் தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப்பெருமான் அடிகள் என்னும் திருப்பெயர்களால் இக்கோயில் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர். மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று இறைவர் திருப்பெயரைக் கோமுத்தீஸ்வரர் என்று குறிப்பிடுகிறது.