பொறிக்கப்பெற்று இருக்கின்றன. கி. பி. 907 முதல் கி. பி 948 வரை சோழமண்டலத்தை ஆட்சி புரிந்தான். இம்மன்னன் தன் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் (907 + 38 = கி. பி. 945) 500 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். அப்பொன்னைக்கொண்டு இக்கோயில் குடப்படை பீடத்துக்குமேல் திருப்பணி செய்யப்பெற்றது. அத்திருப்பணி முடிவு பெற்று கும்பாபிடேகஞ் செய்யக் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது சென்றிருக்கவேண்டும். பராந்தகன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி. பி. 947) அதாவது, இன்றைக்கு 1040 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் கற்றளியால் ஆக்கப் பெற்றதாகும். 1 கற்றளியைக் கட்டியவர்: பராந்தகன் காலத்தில் இக்கற்றளியைக் (கருங்கல்கோயிலை) கட்டியவர் கற்றளிப்பிச்சர் ஆவர். இவருடைய பிரதிமை கர்ப்ப இல்லின் தென்புறத்தே அதாவது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குக் கீழ்ப்புறத்தில் கைகளை மார்பிற்கு நேரே குவித்துத் திருவாவடுதுறை உடையாரை வழிபடும் நிலையில் இருக்கின்றது. கற்றளிப் பிச்சன் என்று அவரது பெயர் செதுக்கப்பட்டுள்ளது. பிச்சன் என்றால் அன்புடையவன் என்று பொருள். "நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்" என்பது திருவாசகம். இக்கற்றளிப்பிச்சர் பிரதிமைக்குக் கிழக்குப் புறத்தே கைகளைத் தலைமேல் குவித்து வழிபடும் பிரதிமை ஒன்று இருக்கின்றது. இவர் கற்றளிப்பிச்சனார் இளவல் திருநாவுக்கரைய தொண்டராவர். கற்றளிப்பிச்சனார் இக்கோயிலைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம்: "ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேஸரி வன்மற்கு யாண்டு இருபத்தைந்தாவது தென்கரைத் திருவழுந்தூர் நாட்டு பிர்ம தேயம் சிற்றானைச்சூர்ஸபையோம். இவ்வூர் கவிசங்கரன் மாறனிடைத்திரைமூர் நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை கற்றளி எடுத்தபித்தன் மஹாதேவர்க்கு உவச்சப்புறமாக விலை கொண்டநிலம் பதினொருமாச் செய்யும்" என்னும் கல்வெட்டுப்பகுதி விளக்குகின்றது. (இக்கல்வெட்டு அகத்தியர் பிரதிமைக்கு மேற்குப்
1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1925 - 1926. Numbers 101 - 162, 59 - 72.
|