முனிவர்களும் செய்த வேண்டுகோளுக்கு இரங்கி இவ் வரசமரத்தின் நிழலில் அமர்ந்த அம்பலத்தில் இறைவர் தாண்டவம் புரிந்தமையால் இப்பெயர் பெற்றது. (போதி - அரசமரம்.) நந்தி தருமநந்திதேவர். தலத்திற்கு வழங்கும் வேறுபெயர்கள் : - கோமுத்தி, கோகழி நவகோடிசித்தபுரம் முதலியன. முசுகுந்தமன்னனுக்கு மகப்பேறு அளித்தது; தரும தேவதையை இடபவாகனமாகக் கொண்டதன்றிச் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோயில்கொண்டு இருக்கும்படி அருளியது; திருஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பொற்கிழியளித்தது; திருமூலநாயனாரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தத் திருவருள் புரிந்தது; போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளியது முதலியவை இப்பதியில் இறைவர் நிகழ்த்தியருளிய விசேடங்களாகும். இவைகளுள் ஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு இறைவர் ஆயிரம் பொன் அளித்தருளியதை ஆண்ட அரசர் (திருநாவுக்கரசர்) இவ்ஊர்ப் பதிகத்தில் "கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே" எனக் கூறியிருப்பது அறிதற்குரியதாகும். மூவர்களுடைய திருப்பதிகங்கள் எட்டையும், திருமூலர் திருமந்திரம் மூவாயிரம் பாடல்களையும், சேந்தனார் திருவிசைப்பாப் பதிகம் ஒன்றையும் பெற்ற பெருமையுடைய பதி இது. திருக்கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்றதும், சைவ சித்தாந்தத்திற்கும் தமிழுக்கும் நல்ல ஆக்கத்தை அளித்து வருவதும் ஆகிய பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் ஒன்று திகழும் பதி இது. இவ்வூர்த் திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம் பராந்தகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் முதலானோர் காலத்தவையும், பாண்டியர்களுள் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்ததுமான கல்வெட்டுக்கள் உள. திருக்கோயில் கட்டப்பெற்ற காலம்: இத்திருக்கோயிலில் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதற்பராந்தக சோழன் காலத்து ஒன்பது கல்வெட்டுக்கள்
|