நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம்பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம். 8. திருஆவடுதுறை திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினார். அவர் அப் பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ் வடிவம் நீங்கப்பெற்றனர் என்னும் காரணம் பற்றி இப்பெயர் பெற்றது என்பர். இது நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் கிழக்கே 1.5 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் முப்பத்தாறாவது தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் திருவாலங்காட்டை அடுத்துள்ளது. பிள்ளையார் 1. துணைவந்தபிள்ளையார். 2. அழகிய பிள்ளையார். இறைவர் : மாசிலாமணியீசுரர். இவரே கர்ப்பஇல்லில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்தநாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர். திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. செம்பொன் தியாகர் : முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இறைவர் திருவாரூர்த் தியாகராசராகக் காட்சி காட்டியருளியமையால் இவர்க்கு இங்கே தனிச் சந்நிதி இருக்கிறது. இவர் வீரசிங்காதனம் உடையவர். இவரது நடனம் சுந்தர நடனம். திருவிழாக்காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர் இவரேயாவர். இறைவி : ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் 'ஒப்பிலா முலையாள் ஒரு பாகா' என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோயிலுக்கு எதிரிலும், கொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும் இருக்கின்றன. மரம் : அரசு. இது படர்ந்து விளங்குதலால் படர்ந்த அரசு என்றும் வழங்கப்பெறும். சபை போதி அம்பலம். தேவர்களும்
|