சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் ஆவர். இவரே அமாவாசை, பொங்கல் புதுநாள் இவைகளின் சிறப்புப் பூசனைக்கு நிவந்தமும் அளித்துள்ளார். முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத்தருளிய ஸ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர் என்னும் பெயரினர் ஆவர். நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரம் ஆதித்யதேவனது மகனான சந்தபேந்திரனால் சகம் 1357 அதாவது கி. பி. 1435 - இல் கட்டப் பெற்றதாகும். வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் மும்முடி திம்மரசர் என்பார் எழுந்தருளுவித்துள்ளார். விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். ஹொய்சல அரசனான வீரசோமீசுவரன் (சோழநாட்டில்) திருவரங்கத்துக்கு வடக்கே 8 கி. மீ. தூரத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிறந்த சிவபக்தன் ஆவான். ஆதலின், திருவானைக்கா கோவிலின் கிழக்குக் கோபுரமான எழுநிலைக் கோபுரத்தைக் கட்டுவித்தான். வீரசோமீசுவரன் திருநாள் என்று தன் பெயரால் இத்திருக்கோயிலில் ஒரு விழா நடத்திவந்தான். வட திருவானைக்காவில் தன் பாட்டனாகிய பாலாலன் II என்பவன் பெயரால் வாலால ஈசுவரத்தையும், தன் பாட்டியாராகிய பத்மலா தேவியின் பெயரால் பதுமலீசுவரத்தையும் எடுப்பித்துள்ளான். இந்த வீர சோமீசுவரனது தாயார் கல்லலா தேவியார் ஆவார். இவரது மேன்மையின் பொருட்டுக் கண்ணனூரிலுள்ள பாலீஸ்வரம் உடையார்க்கு இந்த அரசன் நிபந்தம் அளித்துள்ளான். இக்கோயிலும் இவனால் எடுப்பிக்கப் பெற்றதாகும். இந்த வீர சோமீசுவரனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில் திருவானைக்கா கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபக்கத்தில் கல்வாக்கூர் தியாகப்பெருமாள், தியாகவிநோதீசுவரம் என்னும் கோயிலைக் கட்டியுள்ளனர். இவைபோன்று ஹொய்சல அரசர்களின் வரலாறுகள் பலவற்றை அறிதற்கு இக்கோயில் ஒரு சிறந்த பொக்கிஷமாக விளங்குகின்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நாள் ஆவணி மாதத்து அவிட்டமாகும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I பிறந்தநாள் சித்திரை மாதத்து மூலநட்சத்திரமாகும். இச்செய்திகளை இவர்கள் இத்திருவானைக்கா கோயிலுக்கு அளித்துள்ள நிபந்தங்கள் அறிவுறுத்துகின்றன. சோழமன்னர்கள் இக்கோயிலைப் பெரிதும் போற்றி வந்தனர்.
|