முடிவு என்று அருள்கிறார். மேலும் இறைவன் ஒருவனேயன்றி, பலர் அல்லர் என்பதையும் இஃது உணர்த்துகிறது. "தலையும் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்றின்றி உனக்கே வைத்தனன். உன் திருவடிக்கே அடிமை" என்று ஓதி உள்ளமையும் கண்டு இவ்வுண்மை உணரலாம். | "வைத்தனன் தனக்கே தலையும் என்நாவும் | நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி | | உய்த்தனன் தனக்கே திருவடிக்கடிமை | உரைத்தக்கால் உவமனே ஒக்கும்" | (தி. 7 ப. 14 பா. 1) |
"அற்றவர்க்கு அற்ற சிவன்" எனத் திருஞானசம்பந்தர் "மங்கையர்க்கரசி" என்னும் பதிகம் (தி. 3 ப. 120 பா. 2) இரண்டாம் பாடலில் குறித்ததுபோல் இங்கு இப்பதிகம் மூன்றாம் பாடலிலும் அற்றவர்க்கு அருள் செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள் தாம் யாது சொன்னாலும் பெற்றபோது உவந்து பெறாவிடில் இகழில் இவரலாது இல்லையோ பிரானார் (தி. 7 ப. 14 பா. 3) எனக் குறிப்பிட்டுள்ளமை காணலாம். மேலும் உலகியல் நிலையில் பெற்றபோது உவத்தலும் பெறாதபோது இகழ்தலும் குறித்துள்ளமை கண்டு தெளியலாம். "வாயினாற்கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவல் ஆரூரன்" (தி. 7 ப. 14 பா. 12) என்று தமது நிலையையும் குறித்துள்ளமை கண்டு மகிழலாம். சிங்கடி அப்பன் : ஆரூரர் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டிருக்கும் நாள்களில், அருகில் உள்ள கோட்புலிநாயனார் தமது ஊராகிய நாட்டியத்தான்குடி நம்பியை வழிபட அழைத்தார். வீட்டில் சுந்தரரை வழிபட்டுத் தம் புதல்வியராகிய சிங்கடியார் வனப்பகையார் என்ற இரு பெண்களையும் வணங்கச் செய்து இவர்களை, "தேவரீர் அடிமைகளாக ஏற்று அருள்புரிய வேண்டும்" என வேண்டினார். நம்பி ஆரூரரோ" இவர்கள் எனக்குத் தூய மக்கள்" என்று ஏற்றுத் தம் மடிமீது அமர்த்தி உச்சிமோந்து ஆசீர்வதித்தார். பிறகு கோயில் சென்று பெருமானை வழிபட்டு, "பூணாண் ஆவதோர் அரவம்" (தி. 7 ப. 15) என்ற பதிகம் பாடி, நிறைவுப்பாடலில் "சிங்கடி அப்பன்" என்று அம்மகளிர்க்குத் தந்தை என்ற முறையைச் சுட்டிப் பாடியருளினார். சுந்தரர், பரவையார் சங்கிலியார் என்னும் இருவர் காரணமாகப் பூவுலகிற்கு வந்தவர் ஆதலின் வேறு பெண்களைக் காதல் உணர்வுடன் நினைத்தாரில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
|