பக்கம் எண் :

180
 

இவற்றுள் சீபர்ப்பதத்துக்கும் திருப்புடைமருதூர்க்கும் இடையில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால் இது திரு இடைமருதூர் என்னும் பெயர்பெற்றது.

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஆடுதுறையை அடுத்துள்ளது இவ்வூர். பேருந்து வசதி மிகுதியும் உண்டு. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள 30 ஆவது தலமாகும்.

இறைவர்: மருதவாணர், மகாலிங்கேசுவரர். இப்பதியைச்சுற்றி இருக்கும் சிவதலங்களின் அமைப்பை ஒட்டி நடேசர் சந்நிதி தில்லையாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி - ஆலங் குடியாகவும், நவக்கிரகக் கோயில் - சூரியனார் கோயிலாகவும் விநாயகர் சந்நிதி - திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி - சுவாமி மலை ஆகவும், வைரவர் சந்நிதி - சீகாழியாகவும், சண்டேசுவரர் சந்நிதி - திருச்சேய்ஞலூராகவும் விளங்குகின்றன. ஆதலால், இது மகாலிங்கத் தலம் என்றும் இறைவர்க்கு மகாலிங்கேசுவரர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இறைவி : நன்முலைநாயகி.

தீர்த்தம்: காவிரி அயிராவணத்துறை. பூசநாளில் இத்துறையில் இறைவர் தீர்த்தம் கொடுத்தருளுவர். இப்பூசநாளில் நீராடலைப்பற்றி அப்பர் பெருந்கையார், இத்தலத்துத் திருக்குறுந்தொகையில்,

"ஈச னெம்பெரு மான்இடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே"

எனவும், திருஞானசம்பந்தப் பெருந்தகையார்.

"பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய
ஈச னுறைகின்ற விடைமருதீதோ"

எனவும் சிறப்பித்து அருளினர்.

உமாதேவியார், உருத்திரர், மூத்தபிள்ளையார், முருகர், பிரமன், விஷ்ணு முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர்.

பெரிய அன்பினையுடைய வரகுணபாண்டியதேவரின் கொலைப்பழியைப் போக்கியருளிய தலம் இதுவாகும்.