பக்கம் எண் :

181
 

பத்திரகிரியார், பட்டினத்துப் பிள்ளையார் இவர்கள் இப்பதியில் பலநாட்கள் தங்கித் தவம்புரிந்து அருள் பெற்றனர். இவர்களுள் பட்டினத்தடிகளார் பிரதிமை கீழைக்கோபுர வாசலிலும், பத்திரகிரியார் பிரதமை மேலைக்கோபுர வாசலிலும் இருக்கின்றன. வரகுணதேவரைப் பிடித்து நீங்கிய பிரம கத்தியின் உருவம் கீழைக்கோபுர வாசலில் உள்ளது.

"பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது அரிது" என்று தாயுமானவரால் பெரிதும் பாராட்டப்பெற்ற பட்டினத்து அடிகளார் இத்தலத்திற்கு மும்மணிக் கோவை ஒன்றை இயற்றியுள்ளார். அது பதினொராம் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது.

கோடீச்சுரக்கோவையைப் பாடிய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இத்தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை உலாவைப் பாடியுள்ளார். இவைகள் அச்சிடப்பெற்றுள்ளன. இவைகளேயன்றி, மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் இத்தல மான்மியத்தை உரைநடையில் எழுதியிருக்கிறார்கள்.

"திருவிடைமருதூர்த் தெருவழகு" என்னும் உலகவழக்கு இவ்வூர்த் திருவீதிகளின் சிறப்பைப் புலப்படுத்துவதாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தரது பதிகங்கள் ஆறும், திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்தும், சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்றும் ஆகப் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய முதற்பராந்தக சோழன் (கி. பி. 907 - 948) இரண்டாம்பராந்தக சோழனது மகனாகிய ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களில் இக்கோயிலில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள்


1 இக்குறிப்புக்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சிப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் எழுதி உதவியது.

See the Annual Reports on South Indian Epigraphy for the years 1895 - 1907, No. 130 - 159 and 193 - 313;

See also South Indian Inscriptions, Volumes.