இறைவர்: இடையாற்றுநாதர். இறைவி: சிற்றிடைநாயகி. தீர்த்தம்: பெண்ணைநதி. கல்வெட்டு: இத்திருக்கோயிலில், சோழமன்னர்களில் குலோத்துங்கசோழ தேவர், இராஜகேசரி வர்மராகிய உடையார் இராசேந்திரசோழதேவர், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களில் திரிபுவனச் சக்கரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் அச்சுததேவமகாராயர், சதாசிவமகாராயர், இராமதேவமகாராயர், முதலானோர் காலங்களிலும், சாளுவ மன்னரில் நரசிங்கதேவமகாராயர் காலத்திலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருமருதந்துறை உடைய நாயனார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர், இராஜராஜவளநாட்டு, திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரிசாதேசத்து கஜபதி மன்னது படையெடுப்பால் திருமருதந்துறை உடையார்கோயில் அழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பாலைவனம்போல் கிடந்தது. சாளுவநரசிம்மதேவனின் பிரதிநிதி ஒருவர் இக்கோயிலைக்கட்டி அதற்கு வழிபாட்டிற்கு ஜோடி, சூல வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி இம்மன்னனது சகம் 1393 அதாவது கி. பி. 1471 இல் ஏற்பட்ட கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. எனவே கஜபதி மன்னரது படையெடுப்பு சகம் 1383 அதாவது கி. பி. 1461 இல் ஏற்பட்டிருக்கவேண்டும். இதற்கு முன்னரே திருமருதந்துறை உடையார் கோயில் நான்கு ஆண்டுகள் பூசனையின்றிக் கிடந்தது. விசயநகர வேந்தரில் இரண்டாவது புக்கன் என்னும் மன்னனது மகனாகிய வீர பூபதி என்பவன் சகம் 1337 அதாவது கி. பி. 1415 இ,ல் பண்டுபோல் பூசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
|