இக்கோயிலில் உள்ள சுப்பிரமணியக் கடவுளின் பெயர் கலியுகராமப் பிள்ளையார் என்பதாகும். இவரை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவன் அனுமலுழான் கொங்கராயன் ஆவன். இப்பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு, திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைக் கொடுக்குமாறு உத்திரவிட்டுள்ளான். இக்கோயிலில் சிவதானீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நில நிவந்தம் அளித்தவன் அனுமலுழான் வேளான் விளநாட்டரையன் திருமருதந்துறை உடையான் ஆவன். இச்செய்தி இங்குள்ள மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் கல்வெட்டால் புலப்படுகின்றது. உத்தரன் பாக்கத்திலிருந்த சுத்தமல்லன் ஆட்கொண்டதேவன் கொங்க ராயனின் தந்தையார், திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவனின் 23 ஆம் ஆண்டில் திருமருதந்துறை உடையார் கோயிலுக்கு 'பல்லவ ராயன் ஏந்தல்' என்னும் பெயருடைய நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த மருதந்துறை உடையார் திருக்கோயிலின் நான்கு மதில்களும் அழிவுற்றிருந்ததை நரசிங்கதேவராயரின் பிரதிநிதி அண்ணமராசர் பழுது பார்த்தற்கு ஏற்பாடு செய்திருந்தார். 12. திருஎதிர்கொள்பாடி இது மேலைத் திருமணஞ்சேரி என்று இக்காலம் வழங்கப் பெறுகின்றது. மணக்கோலத்துடன் வந்த அன்பனான அரசகுமாரன் ஒருவனை இறைவர் மாமனாராக எதிர்கொண்டு அழைத்துச்சென்ற காரணத்தால் இப்பெயர் வந்தது என்பர். இத்தலத்தில் ஐராவதம் பூசித்துப் பேறுஎய்தியது. இறைவர்: ஐராவதேசுவரர். இறைவி: மலர்க்குழல் நாயகி.
|