பக்கம் எண் :

228
 

செய்தான். கங்கைகொண்டசோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்துப் பணிப்பெண் ஒருத்தி இக்கோயிலுக்குப் பொன் அளித்துள்ளாள்.

முதலாம் இராஜராஜசோழனது கல்வெட்டின் ஒரு பகுதியில் பகல் பூசைக்குத் திட்டம் செய்ததைப் பற்றியும்; மற்றொரு பகுதியில் மாதேவிப் பேரங்காடி வியாபாரி ஒருவன் கூத்தன் அழகன் என்பானின் பெயர் எழுதப்பட்டுள்ளது. கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஒருநாழி தும்பை மலர் அளிக்க வடுகன்நல்லூரடிகள் என்ற விக்கிரம சோழ பிரமமாராயன் ஐந்து காசுகள் கொடுத்தான்.

இத்திருக்கோயில் கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் இருந்து, அவ்வாற்று வெள்ளத்தால் இடிந்து போய்விட்டது. சைவப் பெரியார்கள் இக்கோயில் கற்களைக் கொண்டுவந்து, சிவபுரிக்குத் தென்பால் கோயில்கட்டி அதில் இறைவரை எழுந்தருளுவித்து உள்ளனர். அங்ஙனம் கட்டியபோது கல்வெட்டுக்களைத் தொடர்ச்சியின்றி வெவ்வேறு இடங்களில் வைத்துக் கட்டியுள்ளனர். அவைகளை ஒருவாறு படித்து இக்குறிப்பு எழுதப்பெற்றது.

இத்திருக்கோயிலில் முதலாம் இராஜராஜசோழன், இவனது மகனாகிய முதல் இராஜேந்திரசோழன் இவர்கள் காலங்களில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு, திருக்கழிப்பாலை உடைய மகாதேவருக்கு ஒரு திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு இத்தேவர் பண்டாரத்தில் காசுகளை வைத்து அதன் வட்டியைக் கொண்டு நாடோறும் உழக்கு நெய் கொண்டு ஒரு விளக்கு எரிய நிவந்தம் அளித்ததைக் குறிப்பிட்டுள்ளது. முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டால் உச்சியம் பேதைக்குத் திருவமுதுக்கு நிலம் அளித்த செய்தி புலனாகின்றது. மேலும் சில துண்டுக் கல்வெட்டுக்கள் தரா விளக்கு, தண்ணீர் அமுதுக்கு வெள்ளிவட்டில், இவைகள் கொடுக்கப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன.

25. திருக்கழுக்குன்றம்

தொண்டை நாட்டுத்தலம். இத்தலம் செங்கற்பட்டிலிருந்து தென்கிழக்கே 14.கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்துகள் உள்ளன.

கழுகுகள் பூசித்துப் பேறுபெற்றமையின் கழுக்குன்றம் எனப்