பக்கம் எண் :

230
 

ஆயிரப்பிரிவிலுள்ள மக்களால் திருமலை ஆளுடை நாயனார் கோயிலுக்கு நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது1. களத்தூர் பிரிவிலுள்ள மக்களால் அதே கோயிலுக்கு காளிங்கராயன் சந்தி விழாவிற்காக நிலம் தானஞ்செய்யப்பட்டது2. மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன் காலத்தில் ஒரு நபரால் சண்முகப் பிள்ளையார் கர்ப்பக்கிருகத்திற்கு விளக்கிடப் பசுக்கள் தானஞ் செய்யப்பட்டுள்ளன3. விஜய நகர அரசன் வீரவிஜய பூபதிராயரது ஆட்சியில் அரசனுடைய அதிகாரியான நாகேசுவரமுடையான் விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான்4. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒல்லாந்து நாட்டு அதிகாரிகளைப் பற்றிய அடையாளச் செய்திகள் குன்றின் ஒருகால் மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின் 8 சுவர்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன5. இவையன்றி விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம், ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட செய்திகளும் அறியப்படுகின்றன.

26. கழுமலம் (சீகாழி)

தலம் :

சோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 14 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் கீகாழி கோட்டத்தின் தலைநகர். மயிலாடுதுறை - சிதம்பரம் இருப்புப்பாதையில் தொடர் வண்டி நிலையம், பேருந்து வசதிகள் உள்ள பெரிய ஊர்.

பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவயம், கழுமலம், சிரபுரம் என்ற பன்னிரண்டு திருநாமங்களையுடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப் பதிகம் அறுபத்து மூன்றில் திருஞானசம்பந்த சுவாமிகளே எடுத்து விளக்கியுள்ளார்கள். அது 'பல்பெயர்ப்பத்து' என அமைக்கப்பெற்றுள்ளது. திருக்கழுமல மும்மணிக்கோவையுள் 'வசையில் காட்சி' என்னும் செய்யுளில் இப்பன்னிரண்டு பெயர்களும் பன்னிருயுகத்தில் வழங்கினவாகப் பட்டினத்தடிகளால் உணர்த்தப் பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம் முதலாகப் பதினான்கு பெயர்களும் உள்ளனவாகத் தலபுராணம் சொல்லும்.


1. 58 of 1909, 2. 59 of 1909.

3. 62 of 1909, 4. 63 of 1909, 5. 66 to 73 of 1909.