விசேடங்கள் : புறவாழிக் கடல் பொங்கி எழுந்த பேரூழிக் காலத்தில் இறைவன் அறுபத்து நான்கு கலைகளையும் ஆடையாக உடுத்துப் பிரணவத் தோணியில் அம்மையப்பனாக எழுந்தருளி வரும்போது ஊழியிலும் அழியாத இத்தலத்தைக் கண்டு இதுவே மூலமென்றெண்ணித் தங்கினர். இங்கே ஒரு மலை உண்டு. இது இறைவன் ரோமச முனிவருக்காகத் திருக்கயிலைச் சிகரமொன்றைத் தென்திசையில் தோற்றுவித்து, தானும் அம்மையுமாக இருந்து காட்சி வழங்கும் இடம். இதனை 'இருபது பறவைகள் ஏந்திக் கொண்டிருக்கின்றன'. இங்கே குரு, லிங்க, சங்கமமாகிய மூன்று திருமேனியையும் வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்; சங்கமமூர்த்தம் சட்டை நாதர். இதுவே திருஞானசம்பந்தப் பெருமான் அவதாரஸ்தலம். சுவாமிகளின் பெயர்கள் : சுவாமி பிரமபுரீசுவரர்; அம்மை திருநிலைநாயகி. சுவாமி அம்மன் கோயில்களுக்கிடையில் ஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுவது. திருத்தோணிச் சிகரத்துள்ள இறைவர் பெரியநாயகர்; தோணியப்பர் எனவும் வழங்கப் பெறுவர். இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே. தீர்த்தங்கள் : பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவ நதி முதலிய இருபத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வழிபட்டோர் : முருகன், காளி, பிரமன், இந்திரன் முதலியோர். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர் போற்றியுள்ளனர். கணநாதநாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாய பரம்பரையில் வந்தருளிய அருள்நமச்சிவாயர், கங்கை மெய்கண்டார் சிற்றம்பலநாடிகள் முதலியோர் வாழ்ந்த தலம்.
|