குதிரைகளிலோ, கால்நடையாகவோ கேதாரம் செல்லலாம். இதுவடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. பிருங்கி முனிவரின் பொருட்டு இறைவியார் இறைவரைப் பூசித்து இடப்பாகம் பெற்ற தலமாகும். இத்தலத்தில் ஆறுமாதம் தேவர்களாலும், ஆறு மாதம் மனிதராலும் பூசைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தேவ பூசை ஐப்பசி பௌர்ணமியில் தொடங்குகிறது. அப்பொழுது பனிக் காலமாதலால் அங்கு மனிதர்களே இருக்கமுடியாது. அர்ச்சகர் முதலானோர் மலையைவிட்டு வந்து விடுவர். பனிக்காலமாகிய ஆறுமாதம் கழித்துப் பூசைக்குச் செல்வர். திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், திருக்காளத்தியிலிருந்தே இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இறைவர் :- கேதார நாதர். இறைவி :- கேதார கௌரியம்மை. 34. திருக்கேதீச்சரம் இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7.5 கி. மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில் தலைமன்னாருக்கு அருகில் உள்ளது. இராஜராஜன் I காலத்திலே செழிப்பபோடிருந்தது. அங்கு இராஜராஜப் பெருந்தெருவும் இருந்தது. போர்த்துக்கேயர் கோயிலை இடித்தனர். மேடுமண்டி இருந்த இடத்தை தவத்திரு ஆறுமுகநாவலர் மீண்டும் கண்டறிந்து, 'தேன்பொந்து' அங்கு சைவ மக்களுக்காக இருப்பதைச் சுட்டினார். நகரத்தார் திருப்பணி செய்தனர். பின் திருப்பணிச் சபை அமைந்தது. கோயில் பழைய செழிப்புப் பெறும் நிலையில் சிங்கள-தமிழ்ப் போரால் மீண்டும் பூசையற்று உள்ளது. மாதோட்டம்: இது "மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான் திருக்கேதீச்சரத்தானே" என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின் தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. சம்பந்தமூர்த்திநாயனாரும் இக் கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள். இறைவர் :- திருக்கேதீசுவரர். இறைவி :- கௌரியம்மை.
|