குற்றம் செய்யினும் குணம் எனக் கொள்பவன்: சிறியோர் செய்த பெரும்பிழையெல்லாம் பெரியோராயவர் பொறுத்தல் கடன் என்பர். பெரியாரே அப்படியென்றால், பெருமான் பிழை பொறுப்பதால் தானே உலகம் வாழ்ந்து வருகிறது. இன்றேல் நாம் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனைகளைப் பெருமான் கொடுத்தால் உயிர்கள் ஒன்றுகூடத் தேறாது. இக்கருத்தை இத்தலத்தில் ஏன் குறிப்பிடுகிறார் என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். சுந்தரர் இறைவனைப் பரவையாரிடத்து ஒரு முறைக்கு இருமுறை தூது அனுப்பியதைத் தவறு என்று கருதினார் ஏயர்கோன் கலிக்காமர். சுந்தரரோ நல்லடியார் ஒருவர் நமது செயலால் நம்மை மட்டுமல்லாது இறைவனையும் குறை உள்ளவராக கருதுகிறாரே என்று மனம் நொந்தார். இருவரையும் ஒன்று சேர்க்கத் திருவுளம் கொண்டார் பெருமான். ஏயர்கோனுக்குச் சூலை கொடுத்தருளினார். சூலையால் வருந்தியபோது இச்சூலை சுந்தரனால் தீரும் என்று அறிவிக்கவும் செய்தார். இது தெரிந்த ஏயர்கோன் வழிவழியாகப் பெருமானுக்கு அடிமை செய்து வாழும் என்னை வருத்தும் சூலையைப் புதிதாய் இன்று ஆண்டு கொள்ளப்பட்ட சுந்தரனோ தீர்ப்பான். அவன் வந்து தீர்ப்பதினும் தீராமையே நன்று என்று உடைவாளால் வயிற்றொடும் சூலையைக் கிழித்து உயிர் துறந்தார். அவர் மனைவியோ மானக்கஞ்சாற நாயனாரின் மகள். பஞ்சவடிக்குத் தமது கூந்தலையே கொடுத்தவர். சுந்தரரைப் பெருமான் சூலை தீர்க்கச் சொல்லி அருளினார். அவர் நாயனார் வீட்டிற்குக் கடிதினில் சென்றார். நாயனாரின் மனைவியார் ஊறு ஒன்றும் இலது. பள்ளி கொள்கிறார் என்று முகமன் சொல்லி வரவேற்கிறார். இருப்பினும் அவரைக் காணவேண்டும் என அறைக்குள் சென்றார். ஏயர்கோன் இரத்த வெள்ளத்தில் இருந்தமையைக் கண்டார். அவர்தம் உடைவாளால் தம் உயிரைப் போக்கிக் கொள்ள முனைந்தார் சுந்தரர். இறை அருளால் ஏயர்கோன் உயிர்பெற்று எழுந்தார். உடைவாளைப் பற்றினார். இருவரும் நண்பராயினர். அருகில் உள்ள திருப்புன்கூர் திருக்கோயில் சென்று சிவலோகநாதரை வழிபட்டனர். அப்போது பாடியதே "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத" என்னும் திருப்பதிகம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வோர் அடியவர் வரலாறு கூறியுள்ள சுந்தரர், "நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்" என்று தொடங்கும் மூன்றாவது பாடலில் ஞானசம்பந்தர், நாவினுக்கரையர், நாளைப் போவார், சூதன், சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம்புல்லன் என்று எட்டு நாயன்மார்களைக் குற்றம்
|