அறிவிப்பதுபோல் "வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம்" என்ற தொடர் அமைந்துள்ளது. என் கண்ணில் ஊற்றுவதற்கு ஒரு மருந்தையாவது உரைத்தருள்க என்று தோழமை முறை தொனிக்க வேண்டுகிறார். நாலாம் பாடலில் "மூன்று கண்ணுடையாய் அடியேன் கண்கொள்வதே கணக்கு வழக்காகில் ஊன்றுகோல் எனக்காவதொன்று அருள்வாய்" என வேண்டுகிறார். திருவொற்றியூரைப் பிரிந்தபோதே ஊன்றுகோல் கேட்டும், திருவெண்பாக்கத்தில்தான் ஊன்றுகோல் கொடுத்தார். தோழமை பற்றியே "மகத்தில் புக்கதோர் சனி எனக்கு ஆனாய்" என்று நிந்தாஸ்துதியாகச் சொல்லுவார். இதில் சோதிடக்கலைநுட்பம் பேசுகிறார் (தி. 7 ப. 54. பா 9). அந்தணாளன் உன் அடைக்கலம் : அந்தத்தை அஃதாவது வேத அந்தமாகிய உபநிடத முடிபை அணவுபவன், நெருங்குபவன், அந்தணன் எனப்படுகிறான். அந்தணத்தன்மையை ஆள்பவன் அந்தணாளன் எனப்படுகிறான். எனவே இங்கு அந்தணாளன் மார்க்கண்டேயனாகிறான். அவனைக் காப்பதற்காகக் காலனைக் காலால் கடிந்தான். இது போன்ற பல அடியவர்கட்கு இறைவன் பல இடங்களில் அருள்செய்த பண்பு நோக்கியே சிவபெருமான் திருவடியைப் புகலாக அடைந்தேன். என்று ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வோர் அடியவர்க்கு அருளிய சிறப்பை அமைத்துப் பாடியுள்ளார் திருப்புன்கூர்ப் பதிகத்தில் (தி. 7 ப. 55). வையகம் முற்றும் மாமழை இல்லாத போது பன்னிருவேலி நிலம் தருகிறோம். மழை பொழிக என்று வேண்டியமையும், அதிக மழை பொழிந்த போது அதை நிறுத்த வேண்டிப் பன்னிருவேலி நிலம் தந்து நிறுத்தப் பெற்றமையும் இரண்டாம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். பன்னிருவேலிநிலம் மட்டுமல்ல, அவையும் நன்னிலமாகக் கொடுத்தார். அப்படி முதலில் கொடுத்தவர் ஏயர்கோன் கலிக்காமரே என்பதை மூன்றாவது பாடலில் குறிப்பிடுகிறார். ஏத நன்னிலம் - குற்றமில்லாத நிலம். இப்பாடலில்தான் சண்டேசுவர நாயனார் வரலாறும் குறிக்கின்றார். மேலும் சேக்கிழார் மரபு காப்பவராகப் பால்குடத்தை இடறினார் எச்ச தத்தன் என்கிறார். சுந்தரரோ உண்மை தெரியவேண்டி "சிவன் தன்மேல் சென்ற தாதை தாள் அற எறிந்த சண்டி" என்கிறார்.
|