திருமுல்லைவாயில் சேர்ந்து "படுதுயர் களையாய்" என்று வேண்டினார். திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் பெற்றார். திருப்பழையனூர் சேர்ந்தார். திருஆலங்காடு அம்மையார் தலையால் நடந்த தலம் என்று எண்ணிப் பழையனூரில் நின்ற "முத்தா முத்திதரவல்ல" எனத் தொடங்கும் பதிகம் (தி. 7 ப. 52) பாடி அருளினார். இங்கும் மரபுகாத்த சுந்தரர் மாண்பை நாம் உணரமுடிகிறது. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றின் இறுதியிலும், "அடியார்க்கடியேன் ஆவேனே" என்று குறித்துள்ளது அவர்தம் அடியார் பக்தியை நமக்குத் தெளியப் புலப்படுத்துகிறது. முன்னோர் மொழி போற்றல்: சுந்தரர் திருநள்ளாறு வணங்கித் திருக்கடவூர் சென்று பணிந்து திருக்கடவூர் மயானம் தொழுகின்றார். அங்கு "மருவார் கொன்றை" (தி. 7 ப. 53) எனத் தொடங்கும் பதிகம் பாடிப்பரவினார். முதல் பாடலில், "திருமால், பிரமன், இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமானாகத் திகழ்பவர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகள்" என்று அறிவிக்கின்றார். ஞானசம்பந்தர் "வரியமறையார்" (தி. 2 ப. 80 பா. 1) எனத் தொடங்கும் பதிகம் முழுமையிலும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "அவர் எம்பெருமான் அடிகளே" என்று அருளிச்செய்துள்ளார். சுந்தரரும் அதையே பின்பற்றிச் சிறிது வேறுபடுத்தி மருவார்கொன்றை என்ற பதிகத்துள் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே" என்பது போன்று பலபடியாகப் "பெரிய பெருமான் அடிகளே" என்று பாடியுள்ளமை பெரிதும் போற்றுமாறு உள்ளது. திருவடிப் பிழையேன்: சபதம் தவறித் திருவொற்றியூரினின்றும் பிரிந்த போது கண்ஒளி மறைந்தது. சூள் - சபதம் பிழைத்தமையால் இந்நிலைமை வந்தது என்று தெரிந்ததும், "எம் பெருமானைப் பாடித் துயர் நீங்குவேன்" என்ற உறுதியோடு "அழுக்குமெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்று தொடங்கும் பதிகம் (தி. 7. ப. 54) பாடிப் பயணத்தை விடாது தொடர்ந்தார். அதில் "பிழுக்கை வாரியும் பால்கொள்வர்" என்பது பெருமானிடத்து உரிமையுடன் சொல்லிக்கொள்வதாக அமைகிறது. பிழை செய்யினும் திருவடிக்குப் பிழை செய்யேன் என்ற உறுதியை நமக்கும் உணர்துவதாய் உள்ளது. அதனை உதாரண முகத்தால்
|