பக்கம் எண் :

360
 


சிவமயம்

சுந்தரர் வரலாறு
(அகச்சான்றுகளுடன்)

திருநெறிச்செம்மல்,
வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர்.,
தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி

திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய அணுக்கத் தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார், அங்கு உமையம்மையாரின் சேடியர்களில் அநிந்திதை கமலினி என்ற மதிமுக நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டு காதல் கொண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர்தம் அழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார், அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர்.

எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து 'நீ மாதர்தேமல் மனம்வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் காதல் இன்பத்தில் கலந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக' என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து 'எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருளவேண்டும்' என வேண்டிக்கொண்டார். பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.