அடியாராகிய ஆதிசண்டேஸ்வர தேவர்க்கு ஒரு குறிப்பிட்ட நிலத்தை இறையிலிபிரமாணம் பண்ணிக்கொடுத்த செய்தியை விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு அறிவிக்கின்றது. பிறசெய்தி : திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீஇராஜராஜ தேவரின் 19 ஆம் ஆண்டில், இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நாயன்மார்களை, வாணகோவரையரும், மாகுலவரும் எழுந்தருளுவித்துக் கொடுபோய் திருச்சத்திமுற்றம் உடையார் கோயிலில் வைத்து விட்டனர். இதைக் கோயில் தானத்தார் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அருவந்தை அரையன் வேதவனப்பெருமாளானான தொண்டைமானாரிடம் கூற அவர் மீளவும் கூத்தாடி அருளும் பிரானார், இவர் நாச்சியார், வேதவனநாயகர் இவர் நாச்சியார், திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார், சுப்பிரமணியர், ஆட்கொண்ட நாயகர் இவர் நாச்சியார், இடபதேவர், ஆளுடைய பிராட்டியார், திருநாவுக்கரசு தேவர், சுந்தரர் பெருமான் பரவை நாச்சியார் இவர்களைத் திருச்சத்தி முற்றத்தினின்று வேள்விக்குடிக்கு எழுந்தருளச்செய்து திருவாபரணங்கள் வேண்டுவனவும், பரிகல பரிச்சின்னங்களும் கொடுத்துள்ளார். 1
1. குறிப்பு: இக்கோயிலின் கல்வெட்டுக்களை, தருமை ஆதீனம் 25 ஆவது பட்டம், கயிலைக்குருமணி, ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் கட்டளையிட்டருளிய வண்ணம் நேரில் படித்துச் சுருக்கம் எழுதலாயிற்று.
|