பக்கம் எண் :

363
 

பிறப்பும் வளர்ப்பும் :

ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்நாட்டில் திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருவவதாரம் செய்தருளினார். சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர்.

நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் அக் குழந்தையின் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார்.

அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கபெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார்.

சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணினார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். சடங்கவி சிவாசாரியாரும் பெரியோரை வரவேற்றுபசரித்தார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார். முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடையனாருக்குத் தெரிவித்தனர்.

அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார்.