தடுத்தாட்கொள்ளப்பெறுதல் : திருநாவலூரில் திருமணத்திற்கு முதல்நாள் காப்பணிதல் நடைபெற்றது. மறுநாள் வைகறைப்பொழுதில் நம்பியாரூரர் துயிலெழுந்து நாட்கடன் முடித்துத் திருமஞ்சனம் ஆடினார். மன்னவர் திருவும், தங்கள் வைதிகத்திருவும் பொலிய மணக் கோலம் கொண்டார். சிவபெருமானுடைய திருவடிகளை எண்ணித் திருவெண்ணீறணிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கக் குதிரைமீதமர்ந்து சுற்றத்தார் நண்பர் புடைசூழப் புத்தூரையடைந்தார். மங்கலமகளிர் நிறைகுடம் முதலிய ஏந்தி எதிர்கொண்டழைத்தனர், நம்பியாரூரர் குதிரையை விட்டு இறங்கிப் போந்து திருமணப்பந்தலுள் மணத்தவிசில் அமர்ந்தார். ஆலாலசுந்தரரைத் தடுத்தாட் கொள்வதாகத் திருக் கயிலாயத்தில் முன்பு உறுதி கூறிய சிவபெருமான் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ள விரும்பி முதிய வேதியராய்த் திருமேனிகொண்டு தளர்ந்த நடையோடு தண்டூன்றித் திருமணப் பந்தருள் நுழைந்தார். முதியராய்வந்த அந்தணர் அங்குள்ளவர்களைப் பார்த்து 'வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்' என்றார். அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் 'தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்' என்றனர். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி 'எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக' எனக் கூறினார். நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து 'உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறுக' என்றார். முதியவர் அவையோரை நோக்கி 'இந்நாவலூரன் எனக்கு வழிவழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு' எனக் கூறினார். அம் மொழிகேட்டுத் திடுக்கிட்டனர் சிலர்; திகைப்புற்றனர் சிலர்; இவர் யார் என இகழ்ந்து நோக்கினர் சிலர். நம்பியாரூரரும் 'இம் மறையோன் மொழி நன்று நன்று' என்று இகழ்ச்சி தோன்ற நகைத்தார். அதுகண்ட கிழவர் அவர் அருகே சென்று 'அக்காலத்தில் உனது பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன? எனக் கேட்டார். நம்பியாரூரர் 'அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்பது இவ்வுலகில் எங்கும் கேட்டதில்லை.
|