இன்றுதான் புதிதாக நீர் சொல்லக்கேட்டேன், மறையோனாகிய நீ பித்தனோ? என்றார். அதுகேட்ட முதியவர் 'யான் பித்தனாயினும் ஆக; பேயனாயினும் ஆக, நீ எத்தனைமுறை இகழ்ந்துரைத்தாலும் நான் நாணமுறுவேன் அல்லேன். நீ என்னைச் சிறிதும் அறிந்து கொள்ளவில்லை என்பதையே நின்மொழிகள் புலப்படுத்துகின்றன. வித்தகம் பேசவேண்டாம். எனக்குப் பணி செய்ய வேண்டும்' என்றார். அதுகேட்ட நம்பிகள் ஆளோலை உண்டு என்று கூறி இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி 'ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்' என்றார். 'நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர் முன்னிலையில் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்' என்றார் அந்தணர், அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர்கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார், அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடாந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து 'அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை' என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார். ஓலையைப் பறிகொடுத்த முதியவர் 'இது முறையோ முறையோ' வெனக் கூவி அழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரைநோக்கி 'உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது' என்று வினவினர். அதுகேட்ட முனிவர் 'நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பியாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்' என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம் முதியவரை நோக்கி 'நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துகொள்வோம்' என்றார். முதியவர் 'நீ திருவெண்ணெய்நல்லூருக்கு வந்தாலும்
|