பக்கம் எண் :

43
 


குருபாதம்

பதிப்புரை

நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்.

-தி. 12 சேக்கிழார்

அவதாரம் என்ற சொல்லுக்குக் கீழிறங்கிவருதல் என்பது பொருள். அருளாளர்கள், வையகத்து மக்களை உய்விப்பதற்காக, மேல் நிலையிலிருந்து கீழிறங்கிவந்து, மக்களோடு மக்களாய்க் கலந்து, வாழ்ந்து, அவர்களை நன்னெறிப்படுத்துவர் ஆதலின், அவர்களை அவதார புருஷர்கள் எனக் கூறுவர்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அத்தகையோரே என்பதை, 'அவதரித்தார்' என்ற சொல்லாட்சியால் பெரியபுராணத்தில் சேக்கிழார் தெரிவிக்கிறார்.


"தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்"

- தி. 12 திருஞான. புரா. பா. 26

"அலகில்கலைத் துறைதழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ
மலரும்மருள் நீக்கியார் வந்தவதா ரம் செய்தார்"

- தி. 12 திருநாவு. புரா. பா. 18

".........................சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால்
தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்"

- தி. 12 தடுத்தாட். புரா. பா. 3

என்பன இம்மூவர் திருவவதாரம் குறித்துச் சேக்கிழார் அருளிய பெரியபுராணப் பாடல்களாகும். அவர்கள் அருளிய தேவாரத்