பக்கம் எண் :

432
 
4.

முடியேன்இனிப் பிறவேன்பெறின்

மூவேன்பெற்றம் ஊர்தீ

கொடியேன்பல பொய்யேஉரைப்

பேனைக்குறிக் கொள்நீ

செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

அடிகேள்உனக் காளாய்இனி

அல்லேன்என லாமே.

4

 

இத்திருப்பாடல், 'இனிப் பிழைசெய்யேன்' என்றுகூறி, முன்பு செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டி அருளிச்செய்தது.

4. பொ-ரை: இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

கு-ரை: "முடியேன்" முதலிய எதிர்மறைகள், "தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே" (தி. 8 திருவா. 6. 39) என்பதுபோல, அவற்றிற்கு ஆற்றாமை குறித்து நின்றன. "ஊர்தி" என்றது, வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகர ஈறு தகரவொற்றுப் பெற்று வந்த படர்க்கைப்பெயர். நெறிகோடினமை, திருக்கயிலையில் மாதர்பால் மனம் போக்கினமை. பொய்ம்மைகள் பலவாவன, மாதர் பால் மனம் போக்கினமையை விண்ணப்பியாது முன் போலவே வழிபாட்டில் நின்றமையும், அதனை இறைவன் தானே உணர்ந்து, 'நீ விரும்பிய மாதர் இன்பத்தை நுகர்தற்கு நிலவுலகிற் சென்று பிறக்க' என்ற பொழுது, "மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐய னேதடுத் தாண்டருள் செய்" (தி. 12 பெ. புரா. திருமலை. 28) என்று வேண்டிக் கொண்டதனை மறந்தமையும், அம்மறவி காரணமாக, 'உனக்கு ஆளல்லேன்' எனப் பலவாறு முரணிக் கூறினமையும்,