திருமுறைகளில் அவரவர் முன்னைய நிலைகள் குறிப்பால் உணர்த்தப்பெறுகின்றன. சுந்தரர் என்ற திருப்பெயர் அவர் திருக்கயிலையில் சிவபிரானது அணுக்கத் தொண்டராய் விளங்கியபோது வழங்கிய திருப்பெயர். இதனைத் திருநாவுக்கரசர், "அந்தகனை அயிற்சூலத்து அழுத்திக் கொண்டார் அருமறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார் சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்" (தி. 6 ப. 96 பா. 5) எனத் தெரிவித்தருளுகின்றார். சுந்தரரும் தன்னை, 'அணுக்கன் வன்றொண்டன்'(தி. 7 ப. 70 பா. 10) எனக் குறிப்பிட்டருள்கிறார். மாதவம் செய்த தென்திசை வாழவும், தீதிலாத் திருத்தொண்டத் தொகையைச் சைவ உலகம் பெற்றுய்யவும், சுந்தரர் அநிந்திதை, கமலினி ஆகியோர்பால் தன் மனத்தைப் போக்கி, அதன் காரணமாக மண்ணுலகில் திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் சிவவேதியர் குலத்தில் சடையனார் இசை ஞானியாருக்குத் திருமகனாராகத் தீதகன்றுலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். அவர்தம் வரலாறு பெரியபுராணத்தில், திருமலைச் சருக்கம், தடுத்தாட் கொண்ட புராணம், ஏயர்கோன் கலிக்காமர் புராணம், கழறிற்றறிவார் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் கேக்கிழார் பெருமானால் விரித்துரைக்கப் பெறுகின்றது. திருவெண்ணெய்நல்லூரில் இறைவனால் ஆவணம் காட்டி ஆட்கொண்டருளப் பெற்ற சுந்தரரை இறைவன் 'அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' எனக் கட்டளையிட்டருளியவாறு, சுந்தரர் 'பித்தாபிறைசூடி' என்னும் திருப்பதிகம் முதலாக, 'தானெனை முன்படைத்தான்' என்னும் திருப்பதிகம் ஈறாக, நூறு திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.
|