உ செந்திலாண்டவன் துணை முதல் பதிப்பின் மதிப்புரை திருப்பனந்தாள்ஸ்ரீகாசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித்தம்பிரான் சுவாமிகள் அவர்கள் சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளங்களுள் ஒன்று முக்கண் உடைமை. மூன்று திருக்கண்களுள் வலக்கண் ஞானக்கண்; இடக்கண் அம்மையாருடைய அருட்கண்; நெற்றிக்கண் உலகை நொடித்து உய்வித் தருளும் கண். முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய வேதங்கள் நான்கு. அவை ஆன்மாக்கள் உய்தற் பொருட்டே அருளப் பெற்றன. நான்கு வேதங்களின் சாரமே, தேனினும் இனிய தண்டமிழ் பாடிய மூவர் தேவாரம். திருமுறைக் களஞ்சியங்களைப் போற்றி வாழ்பவையும் வாழ்விப்பவையும் தென்னாட்டுச் சைவ மடங்கள் ஆகும். திருமுறைகளைக் கண்ணெனப் போற்றி மக்களுக்கு அருள் ஞானத்தை வழங்குவது, திருக் கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் என்பது கண்கூடு. "திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய்" என்று தருமை ஆதீன முதற்குரவராகிய குரு ஞானசம்பந்த பரமாசாரிய மூர்த்திகளும் அருளியுள்ளார்கள். பன்னிரண்டாம் திருமுறைக்கு மூல காரணர் ஆகிய சுந்தரர் கயிலையிலிருந்து நிலவுலகத்துக்கு எழுந்தருளியவர்; சிவார்ச்சனைப் பாட்டாகிய தண்டமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்காகவே சிவபெருமானால் அனுப்பப்பெற்றவர். திருக்கயிலாய பரம்பரையில் வழிவழி வந்த ஞானபீடத்தில் வீற்றிருந்து ஞானதானம் செய்தருள்பவர்களும், கயிலையை நேரில் கண்டு தரிசித்துச் சிவானந்தப் பெருவாழ்வு பெற்றிருப்பவர்களும்
|