மக்களை இறைநெறியில் ஈடுபடுத்தும் பாடல்கள் பலவும் அவர் திருமுறையில் காணப்படுகின்றன. இன்னோரன்ன பொருட் சிறப்புடைய சுந்தரர் தேவாரத்தைப் பொருள் உணர்ந்தோதிப் பரவும் வகையில் தருமையாதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மகாவித்துவான் திரு. சி. அருணைவடிவேலு முதலியார் அவர்களைக் கொண்டு உரை எழுதச் செய்து 1964ஆம் ஆண்டு ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழாமலராக வெளியிட்டருளினார்கள். இதுபோது அந்நூலை ஏனைய திருமுறைகளுடன், ஒளியச்சில் அழகிய பதிப்பாக ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணிகளின் வெள்ளிவிழா மலராக 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டருளுகின்றார்கள். இத்திருமுறை வெளியீட்டுக்கு மலேசியா அன்பர், டான்ஸ்ரீ திரு. எம். சோமசுந்தரம் அவர்கள் நன்கொடை வழங்கியுள்ளார். சைவ நல்லுலகம் இத்திருமுறையின் சிறப்பை உரை நலத்தோடு ஓதி உணர்ந்து, இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மைப் பயன்களையும் பெற்று இன்புறுவதாக. இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை - யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார். அன்பர்கள் இத்திருமுறையைப் பொருளுணர்ந்து ஓதி இறைவன் திருவருள் பெற்று இன்புறுவார்களாக. தருமை ஆதீனம் மயிலாடுதுறை. | இங்ஙனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் உத்தரவுப்படி, | | திருநாவுக்கரசுத் தம்பிரான் |
|