பக்கம் எண் :

51
 


சிவமயம்
குருபாதம்

முதல் பதிப்பின் முகவுரை

திருச்சிற்றம்பலம்

உளத்திலொரு துளக்கமிலோம் உலகுய்ய இருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு கனகம்ஆற் றினிலிட்டு
வளத்தின்மலிந் தேழுலகும் வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின் குழிவாய்நின் றெனையெடுத்தார்.

- தி. 12 சேக்கிழார்

சைவ சமயாசாரியர் நால்வர் எனினும், தலங்கள் தோறும் சென்று இறைவனை வணங்கித் திருப்பதிகம் அருளிச் செய்த மூவரை முதற்கண் வைத்து, 'மூவர் முதலிகள்' எனப் போற்றுதல் மரபு என்பது பலரும் அறிந்தது. அதற்கேற்ப அவர்கள் அருளிச் செய்த திருப்பதிகங்களும் எண்ணிறந்தனவாம்.

'திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் 'பதினாறாயிரம்' என்கின்றார், நம்பியாண்டார் நம்பிகள்.

திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் 'நாலாயிரத்துத் தொளாயிரம்' என்று, சுந்தரர், நம்பியாண்டார் நம்பிகள் திருமொழி பற்றிக் கூறப்படுகின்றது.

சுந்தரர் அருளிச் செய்த 'திருப்பதிகம் முப்பத் தெண்ணாயிரம்' என்று சிலரும், 'முப்பத்தெண்ணாயிரம் பாடல்' என்று சிலரும் திருமுறை கண்ட புராணம் பற்றிக் கூறுகின்றார்.

மூவரது திருப் பதிகங்கள், அல்லது பாடல்கள் இவ்வாறு இலட்சத்திற்கு மேலாகச் சொல்லப்படுதலால், தமிழ்நாட்டில் தேவாரத் திருப்பதிகங்கள் மிகப் பெரிய அளவில் வழங்கின என்பது பெறப்படும்.