| இத்துணைத் திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்துள்ள திருப்பதிகங்கள் எழுநூற்றுத் தொண்ணூற்றைந்தேயாகும். அவற்றுள் சில திருப்பதிகங்களுள் சில திருப்பாடல்களும், சில திருப்பாடலின் பகுதிகளும் கிடைத்தில. திருஞானசம்பந்தர் அருளிய, 'விடைவாய்' என்னும் தலத்திற்குரிய திருப்பதிகம் (தி. 3 ப. 126) ஒன்று, கல்வெட்டிலிருந்து பின்னர்க் கிடைத்தது. நம்பியாண்டார் நம்பிகளால் திருமுறைகள் வகுக்கப்பட்டவற்றிலும், தேவாரத் திருமுறைகளே பாதியளவிற்கு மேல் உள்ளமை அறியத்தக்கது. இன்னும் தேவாரத் திருமுறைகளைக் காண முயன்று கண்டெடுத்து அவற்றை வகைப்படுத்தப் புகுந்தபொழுதே, ஏனைய திருமுறைகளும் வகுத்தமைக்கப்பட்டன. திருமுறைகண்ட புராணம் எழுந்தது தேவாரத் திருமுறையைக் கண்டெடுத்து, வகுத்தமைத்த முறையைக் கூறுதற்கே என்பது அதன் காப்புச் செய்யுளாலே விளங்கும். அப் புராணம் திருமுறைகளின் பெருமையைக் கூறவந்த இடத்திலும், மூவர் தேவாரத்தின் பெருமையையே சிறந்தெடுத்துக் கூறுகின்றது. "கண்டபெரு மந்திரமே மூவர் பாடல்கைகாணா மந்திரங்கண் ணுதலோன் கூறல்"
 -திருமுறைகண்ட புராணம், 13 | அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் |  | அதுபோல்அன் றிதுஎன்றும் உளதாம் உண்மைப் |  | பரபதமும் தற்பரமும் பரனே யன்றிப் |  | பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரில் |  | எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும் |  | என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும் |  | கரியைவளை விக்கும்கல் மிதக்கப் பண்ணும் |  | கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே. |  | -திருமுறைகண்ட புராணம், 17 | 
இன்னோரன்னவற்றால், தேவாரத் திருப்பதிகங்கள் திருமுறைகளில் முதற்சிறப்புடையனவாதல் தெளிவு. இவை இசைத் தமிழாயும், அவ் இசைகள் தமிழுக்குரிய பண்களாயும் அமைந்திருத்தல் அவற்றிற்கு மற்றும் ஒரு தனிச் சிறப்பாகும். |