தேவாரத் திருப்பதிகங்களுள், சம்பந்தர், அப்பர் திருப் பதிகங்கள் பெரும்பாலும் ஒரு காலத்தே தோன்றியன. சுந்தரர் திருப்பதிகங்கள். அவைகட்கு, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பின்னர்த் தோன்றியவை. முன்னை இருவரது காலமும், தமிழ் நாட்டில் புறச் சமயங்கள் அரசர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மேலோங்கியிருக்க, சைவ சமயம் அருகியிருந்த காலம். அதனால், அவர்கள் புறச் சமயக்களைகளைக் களைந்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்க வேண்டிய நிலையில் இருந்தனர். சுந்தரரது காலம் அவ்வாறின்றி, ஞானசம்பந்தர், நாவுக்கரசரது நல்லருட்செயல்களால், புறச்சமயம் அறவே மறைய, சைவ சமயம் மேலோங்கியிருந்த காலமாகும். அதனால், அப்பொழுது முன்னை இருவரது பாடலைப் பெற்ற தலங்கள் சிறப்புற்று விளங்கின; மக்களும் சைவ சமயத்தில் ஆர்வமும், ஊக்கமும் கொண்டிருந்தனர். மேலும் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் சைவ சமயத்தவராய் விளங்கினமை குறிப்பிடத் தக்கது. மூவேந்தர்களும் வன்றொண்டரை ஆசாரியராகக் கொண்டு போற்றினமைக்கு, அவர் தமது திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில், "முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த" (தி. 7 ப. 2 பா. 11) என்று அருளியிருத்தலே போதிய சான்று. ஆகவே, ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் காடு போக்கி, நிலந்திருத்தி விதைத்துச் சென்ற வித்து விளைவைத்தர, அதன் பயனை மக்கள் மகிழ்ந்துண்ணுங் காலமே, நம்பியாரூரர் வாழ்ந்திருந்த காலம் என்பது நன்கு புலப்படும். காலத்திற்கு ஏற்ப, இறைவனும், முன்னை இருவருள் ஒருவரை அடியாராகவும், மற்றொருவரை மகனாராகவும் கொண்டு அருள் செய்தான்; ஆளுடைய நம்பிகளைத் தோழராகக் கொண்டு திருவருள் புரிந்தான். இந்நிலைகட்கு ஏற்பவே, இவர்களது திருப்பதிகங்களும் திகழ்தல் கண்கூடு. 'சம்பந்தன் தன்னைப் பாடினான்' 'நாவரசன் என்னைப் பாடினான்; சுந்தரன் பொன்னைப் பாடினான்' என்று சிவபிரான் சொன்னதாக ஒரு பழமொழி உண்டு. அத்தன்மைகள் அத்திருப்பதிகங்களில் விளங்குதலைக் காணலாம்.
|