திருக்கடைக்காப்பில் தம்மேல் ஆணைவைத்து அருளுதல் முதலாகத் திருப்பதிகத்தின் பெருமையை எடுத்து விளக்குதல் ஞானசம்பந்தரது திருப்பதிகங்களில்தான் முனைந்து தோன்றும். இது பற்றியே அவரது தேவாரத்தை. 'திருக்கடைக்காப்பு' என்றே குறிப்பிடுவர் சிலர். இன்னும் இயற்கை வருணனைகள், உலகத்தாரையும், அடியார்களையும் நோக்கி, 'இது செய்மின்; இது செய்யன்மின்' என விதித்தல், விலக்குதல், பலவகைத் 2தாளஅமைதிகள், யமகம், ஏகபாதம் முதலிய சித்திரக்கவிகள் எல்லாம் அமைந்து தோன்றுவன, அவரது திருப்பதிகங்களே. நாவுக்கரசர் தேவாரம், "கொடுமைபல செய்தன நானறியேன், (தி. 4 ப. 1 பா. 1) நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், (தி. 4 ப. 1 பா. 2) சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" (தி. 4 ப. 1 பா. 6) என்று சொல்லிச் சூலைநோயைத் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டித் தொடங்கியது போலவே, "என்னை நீ இகழவேண்டா, (தி. 4 ப. 23 பா. 1) அடியேனைக் குறிக்கொண்மினே, தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே, அம்மான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே, (தி. 4 ப. 113 பா. 2) இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் - துடைக்கினும் போகேன் - தொழுது வணங்கித் தூநீறணிந்து உன் அடைக்கலங் கண்டாய், சிவனே உன் அபயம் நானே, திருவடி மறப்பிலேனே" (தி. 4 ப. 81 பா. 8) என்றாற்போல இறைவனைப் பலவாறு பணிந்து வேண்டிக் கொள்ளுதலும், "என்கடன் பணிசெய்து கிடப்பதே, (தி. 5 ப. 19 பா. 9) தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, கைகாள் கூப்பித் தொழீர், (தி. 4 ப. 9) நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம் பிரானுடைய கோயில்புக்குப் - புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி என்றும் .............. அலறா நில்லே" (தி. 6 ப. 31 பா. 3) என்றாற் போலத் தொண்டினை வலியுறுத்துதலும் "என்செய்வான் தோன்றினேன், ஏழையேனே, கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே, சாராதே சாலநாள் போக்கினேனே, போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே, குறிக்கோள் இலாது கெட்டேன், (தி. 4 ப 67 பா. 9) பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன், அழிவுடைத்தாய வாழ்க்கை
|